My Account Login

ஐக்கிய நாடுகள் சபையில் புகார் அளித்த தமிழ் பெண்களுக்கு மிரட்டல் - பாதுகாப்பு வழங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

GENEVA, SWITZERLAND, July 8, 2018 /EINPresswire.com/ --

இலங்கையில் காணாமற்போனவர்களின் தமிழ் தாய்மார்கள் அறுவர் இப்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவை அமர்வில் வாக்குமூலம் அளித்த பின் இலங்கை திரும்பும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆவன செய்யும் படி ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தலைவர் மேதகு தூதுவர் வொஜிஸ்லாவ் சக் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் சிறிலங்காவில் பத்தாயிரக் கணக்கானோர் காணமற்போயுள்ளனர். அவர்களில் சிலரின் தாய்மார்களான இவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடிக்க உதவி கேட்டு வருகிறார்கள். காணாமற்போனவர்களில் பலர் ஒன்பதாண்டுகளுக்கு முன் போரின் முடிவில் அவர்களின் குடும்பத்தினரால் சிறிலங்கப் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த காலத்தில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் தமிழர்கள் காணாமற்போயிருப்பதாக நம்பகமான செய்திகள் உள்ளன. இத்தனைப் பேர் காணாமற்போயிருந்தும் ஒரே ஒரு இராணுவ அதிகாரி கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருப்பவர் அதன் ஐக்கிய நாடுகள் பிரதிநிதி திரு சுகிந்தன் முருகையா ஆவார்.

காணாமற்போனவர்களின் தாய்மார்களில் ஆறு பேர் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் நடப்பு அமர்விற்கு வருகை தந்து பேரவையின் பல்வேறு அரங்குகளிலும் பேசவுள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களுக்கும், காணாமற்போன கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேருக்கும் விடுதலை பெற்றுத்தர வேண்டும் அல்லது அவர்கள் உயிரிழந்த சூழ்நிலைகள் குறித்துத் தகவல் பெற்றுத்தர வேண்டும் என்று உறுப்பரசுகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர். காணாமற்போனவர்களின் குடும்பத்தார் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவதற்கென்று கூட்டாக ஒரு குழு அமைத்துள்ளனர்.

காணாமற்போனவர்களின் தாய்மார்கள் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் துணை நிகழ்வுகளில் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்த போது சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளும், சிறிலங்கா இராணுவ உளவுத் துறை அதிகாரிகள் பலர் அவர்களின் உரையில் முரட்டுத்தனமாகக் குறுக்கிடவும், உரக்கக் கத்தி அவர்களை வசை கூறவும் அச்சுறுத்தும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தவும் செய்தனர். இந்த அச்சுறுத்தல்களால் தாய்மார்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகி அவர்களில் ஒருவர் ஐநா மனிதவுரிமைப் பேரவையில் மயக்கமுற்று, ஜெனிவாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த அதிகாரிகள் காணாமற்போனவர்களின் தாய்மாரைப் பின்தொடர்ந்து சென்றும் அச்சுறுத்தினார்கள்.

இந்தத் தாய்மார்கள் தங்கள் அன்புக்குரியவர்களை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று, ஆயிரக்கணக்கான மற்றக் குடும்பத்தினருடன் சேர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து பட்டினிப் போராட்டங்களும் கவன ஈர்ப்புகளும் கிளர்ச்சிகளும் நடத்தி வருகின்றனர். அவர்கள் சிறிலங்கக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்கள். அவர் ஒன்பதாண்டு முன்பு பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்து, பிறகு என்னவானார்கள் என்றே தெரியாமல் போனவர்களின் பட்டியல் தருவதாக உறுதியளித்தார். ஆனால் குடியரசுத் தலைவர் தன் உறுதியைக் காப்பாற்றினாரில்லை. தாய்மார்கள் காணாமற்போனோர் அலுவலகத்துக்கும் சென்றார்கள். ஆனால் அவர்களும் உறுதிகள் தந்து விட்டு அவற்றை காப்பாற்றவில்லை.

கடைசி முயற்சியாக இந்த தாய்மார்கள் அவசர நடவடிக்கைக்கான வேண்டுகோளுடன் ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு வந்துள்ளனர். அவர்களை இங்கே முன்னாள் சிறிலங்கா பாதுகாப்புப் படை அதிகாரிகளும் இராணுவ உளவுத் துறை அதிகாரிகளும் இழிவுக்கும் தொல்லைக்கும் ஆளாக்கியுள்ளனர்.

“கற்பனை செய்து பாருங்கள், ஐநா மனிதவுரிமைப் பேரவையில் அவர்கள் இத்தகைய இழிவுகளைச் சந்திக்க நேர்ந்தால், சிறிலங்கா திரும்பும் போது அவர்களின் அவலம் எத்தகையதாக இருக்கும்?” – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பியுள்ள வேண்டுகோள் இந்தக் கேள்வியை எழுப்புகிறது.

“அன்புக்குரியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவி கேட்டு ஐநாவுக்கு வந்த தாய்மார்கள் சிறிலங்கா திரும்பும் போது சிறிலங்கப் பாதுகாப்புப் படையினரால் தொல்லைக்கும் கைதுக்கும் இழிவுக்கும் தாக்குதலுக்கும் ஆளாக்கப்படாமல் உறுதிப்படுத்துங்கள் என்று நாங்கள் ஐநாவை வலியுறுத்துகிறோம். முன்பு அவர்தம் குடும்பத்தினரும் கூட சிறிலங்க இராணுவ உளவுத்துறையின் தொல்லைக்கும் தாக்குதலுக்கும் ஆளாயினர் என்பதால் பாதுகாப்பு வழங்குவதானால், குடும்பத்தினர்க்கும் சேர்த்தே வழங்க வேண்டும்.”

“காணாமற்போனவர்களின் அன்னையராகிய இந்த அறுவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்படி பேரவைத் தலைவர் சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.”

“ஐநாவின் தலையாய மனிதநேய அமைப்பாகிய ஐநா மனிதவுரிமைப் பேரவை, தன்னை நாடி வரும் பாதிப்புற்றோர் பேரவையில் இருக்கும் போது தொல்லைக்கோ இழிவுக்கோ அச்சுறுத்தலுக்கோ ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பும் போதும் அவர்களின் பாதுகாப்பு உத்திரவாதம் செய்யபப்ட வேண்டும்” என்று முடிகிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோள்.

காணாமற்போனவர்களின் அன்னையரில் பாதுகாப்பு தேவைப்படும் அறுவரின் பெயர்கள்:

1) செபஸ்தியன் தேவி, திருக்கோணமலை, சிறிலங்கா,
2) மரியசுரேஷ் ஈஸ்வரி, முல்லைத்தீவு, சிறிலங்கா,
3) வள்ளிபுரம் அமலநாயகி, மட்டக்களப்பு, சிறிலங்கா,
4) யோகராஜா கனகரஞ்சினி, கிளிநொச்சி, சிறிலங்கா,
5) ஆனந்த நடராஜா லீலாதேவி, கிளிநொச்சி, சிறிலங்கா,
6) தம்பிராஜா செல்வராணி, அம்பாறை, சிறிலங்கா.

Email: secretariat@tgte.org

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+41-79-943-2420
email us here

View full experience

Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Social Media, World & Regional